நெகிழி - நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் நாளேனும் இதனை பயன்படுத்தாது இருக்கிறோமா ? இல்லை என்றே அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழி பயன்பாடு நம்மிடையே உள்ளது. விடியற்காலை நெகிழிப் பைகளில் பால் வாங்குவது தொடங்கி, கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, புதிய துணிமணிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், உணவகங்களில் உணவு வாங்கினால், சூடான உணவுப் பொருட்கள், கொதிக்கும் குழம்பு வகைகள் வரை அனைத்துமே நெகிழிப் பைகளில் என்றாகி விட்டது.
இந்த நெகிழிப் பைகளை பயன்படுத்தி விட்டு என்ன செய்கிறோம் ? குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன ? மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா ? இல்லை. மண்ணுள் அப்படியே தங்கிப் போய்விடுகின்றன. காற்றில் அலைக்கழிக்கப் பட்டு, நீர் நிலைகளில் சென்று சேர்ந்து நீரினையும் மாசு படுத்துகின்றன.
நெகிழிப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் நச்சுத் தன்மை கொண்டவை. நெகிழிப் பைகள் தயாரிக்கப் பயன்படும் ஸைலீன் (Xylene), எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide), பென்ஸீன் (Benzene) ஆகிய இரசாயனங்கள், உயிரினங்களுக்கு பல விதமான நோய்களையும் உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயங்களால் நீர், நிலம், காற்று என்று நம் வாழ்வுக்கு ஆதாரமான அனைத்துமே பாழ்பட்டுப் போகின்றன.
நெகிழிப் பைகளை அழிப்பதாக எண்ணி அவற்றை எரித்தாலும், புதைத்தாலும் அதனால் விளையும் கேடுகளே அதிகம். எரிக்கையில் வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரினங்களின் நலனுக்கு கேடாக அமைகின்றன. நாம் தூக்கி எறியும் நெகிழிப் பைகளின் நிறங்களினால் ஈர்க்கப் பட்டு பறவைகளும் விலங்குகளும் அவற்றை உண்டு விடுகின்றன. கடலில் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரும் நெகிழிப் பைகள், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எமனாக அமைகின்றன.
இது போன்று, ஏதேனும் ஒரு நீர்வாழ் உயிரினம் நெகிழிப் பைகளை அறியாமையால் உட்கொண்டு விட்டால், அதனால் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். அது எப்படி ? நெகிழிப் பையை உட்கொள்வதால் ஓர் நீர்வாழ் விலங்கினம் முற்றிலுமாக அழிந்து போய் விடும் எனில், உணவுக்காக அந்த உயிரினத்தை சார்ந்திருக்கும் மற்றோர் இனத்திற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். இப்படி ஏற்படுவதால், ஓர் உணவுச் சங்கிலி (food chain) அறுபட்டு விடுகிறது. உணவுச் சங்கிலி அறுபட்டால், ஒரு இனம் அளவிற்கு அதிகமாக பெருகவும், வேறோர் இனம் உணவின்றி அழியும் அபாயமும் ஏற்படுகிறது.
நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.
நிலங்கள் மற்றும் காடுகளை ஆக்கிரமித்திடும் நெகிழிப் பைகளை உணவாகக் கொண்டுவிடும் விலங்குகளின் வயிற்றில் அவை அப்படியே தங்கிப் போய், அவற்றிற்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளினால் மூன்று மாதத்திற்கு ஒரு காட்டு விலங்கு வீதம் அழிகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பூமியில் உள்ள உயிர் இனங்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும் பேராபத்தும் இருக்கிறது.
மண்ணிலும் விளைநிலங்களிலும் மண்டிவிடும் நெகிழிப் பைகள் நிலத்தடி நீரோட்டத்தினை பாதிக்கின்றன. மேலும், தாவரங்களின் வேர்கள் நிலத்தினுள் பரவி ஓடை இயலாதவாறு தடை செய்கின்றன. இதனால், செடி கொடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப் படுகிறது.
நெகிழிப் பைகளால் விழையும் இத்தகைய தீங்குகளில் இருந்து நம்மையும் நமது சுற்றுச் சூழலையும் காத்துக் கொள்வது எங்கனம் ? நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தலாம். அவை நமக்கு பயன்படாது என்று எண்ணினால், அவற்றை குப்பைகளில் வீசி, அல்லது எரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாது, அவற்றை மறுசுழற்சி மையங்களில் (Recycling Centers) கொடுத்து விட்டால், அவர்கள் அந்தப் பைகளைக் கொண்டே மீண்டும் புதிய பைகளை உருவாக்கி விடுவார்கள்.
நாம் கடைகளுக்கு செல்கையில் நாமே கைகளில் பைகளை கொண்டு சென்றால், கடைகளில் இருந்து வாங்கி வரும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கை குறையும். அவை வீணாக குப்பையில் சென்று சேர்வதும் தவிர்க்கப்படும்.
கனடாவிற்கு வந்த புதிதில், ஒரு கடையில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்த போது, வாங்கிய சாமான்களை போட்டுத் தர நெகிழிப் பை வேண்டுமெனில், அவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலித்தார்கள். இதனால் அக்கடைக்கு வரும் மக்கள் அனைவருமே தம்முடன் பைகள் வைத்திருந்தனர். இது போன்ற திட்டமும் கூட, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும்.
நெகிழி தண்ணீர் பாட்டில்கள் அழகான பைகளாக உருமாற்றி, நாம் கடைத் தெருக்களுக்கு செல்கையில் பயன்படுத்தும் வகையில் பயனுள்ளதாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.



























